கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம். இவர் தனது மனைவி ஷீபா மற்றும் பேரன் ஆருண் மற்றும் மருமகள் அலினா தாமஸ் ஆகியோருடன் பெங்களூருக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தார். கோவை - சேலம் எல்.என்.டி பைபாஸ் சாலையில் இன்று மதியம் அவர் காரில் சென்று கொண்டு இருந்தார். மேலும் கோவையில் இன்று காலை முதலே லேசான மழை பெய்து கொண்டு இருந்ததால் சாலை முழுவதும் தண்ணீராக இருந்தது.
இந்நிலையில் மதுக்கரை அருகே கேரளாவுக்கு சென்று கொண்டு இருந்த ஈச்சர் லாரி ஜேக்கப் ஆபிரகாம் ஓட்டிச் சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜேக்கப் ஆபிரகாம், அவரது மனைவி ஷீபா மற்றும் பேரன் ஆருண் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அலினா தாமஸ் ஆம்புலன்ஸ் மூலம் கோவை உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லாரியை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த கந்தன் என்பவரின் மகன் சக்திவேல் (39) என்ற ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோவை எல்.என்.டி பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.