தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு செய்த சிறிது நேரத்திலேயே தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை பத்திரப்பதிவுத் துறையும் வருவாய்த்துறையும் இணைந்து கடந்த ஜூன் 15 அன்று தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் உட்பிரிவு செய்யும் தேவை இல்லாத நில கிரையங்களில் தானியங்கி முறையில் சில மணி நேரத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய முடிகிறது.
தமிழக அரசின் புதிய திட்டப்படி தற்போது ஒரு நிலத்தையோ, வீட்டையோ அல்லது வேறு சொத்தையோ வாங்குபவர் அதன் பரப்பளவில் மாற்றங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் உடனடியாக அவரது பெயர் ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும். மாவட்டம், தாலுகா, நகரம்/கிராமம், சர்வே நம்பர், உட்பிரிவு போன்ற உள்ளீடுகளைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் ஆன்லைன் பட்டாவை https://eservices.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் பதிவிறக்கிக் கொள்ள முடிகிறது.
சொத்தைப் பதிவு செய்தவுடன், புதிய உரிமையாளரின் பெயர் உடனடியாக பட்டா சான்றிதழில் தோன்றும் என்றும், அதனை https://tnreginet.gov.in/portal/ என்ற இணையப்பக்கத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அதேநேரம் பழைய சொத்துக்கள், ஏற்கனவே பட்டா வாங்காமல் உள்ள சொத்துக்களுக்கு பட்டா பெற வழக்கம் போல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இ சேவை மையத்தில் விண்ணப்பித்தால் அவர்கள் நிலத்தை அளக்க நாள் குறிப்பார்கள். அது எஸ்எம்எஸ் ஆக உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். சர்வேயர் நிலத்தை அளந்து பரிந்துரை செய்வார்.அதன்பிறகு கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் ஆகியோர்களின் பார்வைக்கு பின்னர் பட்டா ஆன்லைனில் வந்துவிடும். உட்பிரிவு இல்லாத பட்டா என்றால் 15 நாட்களிலும், உட்பிரிவுடன் கூடிய பட்டா என்றால் 30 நாளிலும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நில அளவைத்துறை சார்பில் இணைய வழிபட்டா மாறுதல் மற்றும் நத்தம் நிலவரி திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டம் இயக்குனர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.
இணையவழி பட்டா மாறுதல் மனுக்களில் தள்ளுபடி சதவீதத்தை குறைக்கவேண்டும் என்றும், நிலுவை இனங்களை குறைத்து, விரைவாக பட்டா வழங்க வேண்டும் என்றும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டம் இயக்குனர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார். மேலும் உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் 30 நாட்களுக்குள்ளும், உட்பிரிவு அற்ற பட்டா மாறுதல் 15 நாட்களுக்குள்ளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், நிலஅளவை உதவி இயக்குனர் ஜெய்சிவக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.