திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு சென்று ஒரு கும்பல், யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலைநயமிக்க 4 யானை பொம்மைகளை விற்பனை செய்ய உள்ளதாக சென்னை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.இதன்பேரில் அதிகாரிகள் ரெய்டு நடத்தியபோது, ரூ.6.50 கோடி யானை தந்தங்கள் மற்றும் 12 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் திருச்சி ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரையும் விழுப்புரம் வனச்சரகத்தினர் அதிரடியாக கைது செய்தனர்.
விலங்கு இனங்களில் மிகப்பெரிய உயிரினம் என்றால் அது யானை. யானை பார்க்க மட்டும் பிரம்மாண்டமானவை இல்லை.. அவை செய்யும் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மாண்டமானவை. யானைக்கு உள்ள தந்தங்கள் விலை மதிக்க முடியாதவை ஆகும்.யானை தந்தத்தை கோடிகள் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ள பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் விரும்புகிறார்கள். யானை தந்தங்கள் கலாச்சாரத்தின்அடையாளமாக இருக்கிறது.
யானை தந்தங்கள் மிக குறைவாக வருவதால் அதனை எவ்வளவு கோடி கொடுத்தும் வாங்க உலக கடத்தல் தாதாக்கள் ரெடியாக இருக்கிறார்கள்.. தங்கத்தைவிடவும் விலை மதிக்க முடியாதவையான யானை தந்தங்கள் இருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் என்ன விலைகொடுத்தாவது வாங்கி வைத்துக்கொள்ள விரும்பும் ஆடம்பர கலாச்சார பொருளாக இருப்பதே விலை மதிக்க முடியாததற்கு காரணம் ஆகும்.
உலகம் முழுவதும் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. இந்தியாவிலும் அவ்வப்போது நடக்கிறது. யானைகள் வேட்டையாடப்படுவது மட்டுமின்றி,அதன் தந்தங்களை விற்பதும், வாங்குவதும் இந்தியாவில் பெரிய குற்றம் ஆகும். அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இந்நிலையில் திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு ஒரு கும்பல், யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலை நயமிக்க 4 யானை பொம்மைகளை விற்பனை செய்ய உள்ளதாக சென்னை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது 6.50 கிலோ யானை தந்தத்தினால் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகளை விற்க வந்தவர்கள், அதனை வாங்க வந்தவர்கள் என 12 பேர் அங்கிருந்தனர். அவர்களை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6.50 கோடி மதிப்பிலான யானை தந்தத்தினால் ஆன பொம்மைகளை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரத்தில் யானை தந்தங்களை விற்பனை செய்த சம்பவத்தில் திருச்சி மாவட்ட ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்டவிசாரணையில் அவர் சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனை வனச்சரக போலீசார் கைது செய்தார்கள்.