திருவண்ணாமலை இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை -அமைச்சர் சேகர்பாபு

0
திருவண்ணாமலை இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள், வீதியுலா நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படும் தேரோட்டம் நேற்று (டிச 10) விமரிசையாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம், வரும் 13-ஆம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படவுள்ளது. இந்த மகாதீபத்தை காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகமானோரை மலை மீது ஏற்ற கூடாது என நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புவியியல் ஆணையாளர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய அறிவிப்பை வெளியிடுவார். கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்ல தேவையான ஆள்கள் மட்டுமே மலை மீது செல்ல அனுமதிக்கப்படுவர்" எனக் கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top