காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் நினைவு கூறும் திறன் அதிகரிப்பு": மாநில திட்டக்குழு அறிக்கை

0
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலமாக மாணவர்களின் நினைவு கூறும் திறன் அதிகரித்துள்ளது என மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செயல்படக் கூடிய உயர்மட்ட ஆலோசனைக் குழுவாக மாநில திட்ட குழு விளங்குகிறது. இந்தக் குழு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்து, அதன் அறிக்கையை சமர்ப்பித்து வருகிறது.

இந்நிலையில், இக்குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு வரைவு கொள்கை ஆவணங்கள் மற்றும் ஐந்து ஆய்வறிக்கைகள் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலினிடம், குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் சமர்ப்பித்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த அறிக்கையில், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தினால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், இத்திட்டத்தால், குறித்த நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்கு வருவது அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், குழந்தைகளின் கற்றல் ஆர்வம், வகுப்பறை கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு ஆகியவற்றில் கணிசமான முன்னேற்றம் அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூறும் திறன் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்படுகிறது.

இதேபோல், புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக 3,28,280 மாணவிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 27.6 சதவீதமும், விவசாயம் அல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 39.3 சதவீதமும் புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top