பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட சாதனையாளர் கராத்தே கழகம் நடத்திய தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஐந்தாவது சாம்பியன்ஷிப் சிலம்பம் போட்டி மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் நடத்திய கபாடி போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி தலைமையாசிரியர் குணசீலராஜ் பாராட்டுக்களை தெரிவித்தார். சிலம்பம் போட்டிகளில் எட்டாம் வகுப்பு பிரிவில், சுதன் கார்த்திக் முதலிடமும், சித்தார்த் இரண்டாமிடமும், ஏழாம் வகுப்பு பிரிவில் சேர்மன் முதலிடமும்,சேர்ம கெளதம் இரண்டாமிடமும், ஆறாம் வகுப்பு பிரிவில் அர்ஜூன் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர். கபாடி போட்டியில், ஆழ்வார்திருநகரி ஒன்றிய அணியில் இடம்பெற்று, மாவட்ட அளவிலான அமெச்சூர் கபடி கழகம் நடத்திய பன்னிரெண்டு ஒன்றியங்களுக்கான சப் ஜூனியர் கபாடி போட்டிகளில் மூன்றாம் இடம் பெற்று சிறப்பு சேர்த்த பதினோராம் வகுப்பு மாணவர் மாரிதுரை, பத்தாம் வகுப்பு மாணவர்கள் சுதேஷ் மற்றும் சந்துரு ஆகியோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
பாராட்டு விழா நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர்,இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், கபாடி பயிற்சியாளர் தீபன் மற்றும் கராத்தே பயிற்சியாளர் டென்னிசன், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.