வீடு புகுந்து வளர்ப்பு நாய், கோழிகளை தூக்கிச்செல்லும் சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

0
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அறிவொளி நகர் வெள்ளிப்பாளையம் மோத்தேபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே வீட்டில் வளர்த்து வரும் வளர்ப்பு நாய்கள் அடிக்கடி காணாமல் போயின. இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், கடந்த அக்.21ந் தேதி அறிவொளி நகர் பகுதியில் ருக்குமணி அம்மாள்(60) என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல் வெள்ளிப்பாளையம் கருப்பராயன் கோவில் அருகே அடிக்கடி சிறுத்தை ஒன்று உலா வந்து அப்பகுதிகளில் இருந்த நாய்களை தூக்கிச்சென்று வந்துள்ளது. இதில் கடந்த நவ.8"ஆம் தேதி மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள மோத்தேபாளையம் பகுதியில் மோகன்குமார்(50) என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று சென்னாமலை கரடு பகுதியில் இருந்து தூக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதுகுறித்த வீடியோ அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை அடுத்து அப்பகுதியில் சிறுமுகை வனச்சர்கள் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அதே மோத்தேபாளையம் பகுதியில் கடந்த டிச.10ஆம் தேதி செவ்வாயன்று இரவு அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பு இருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று பதுங்கி வந்து தூக்கிச்சென்றுள்ளது.

அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் முன்பு இருந்த வளர்ப்பு நாயை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளார்.அப்போது,வளர்ப்பு நாயை சிறுத்தை பதுங்கி வந்து தூக்கிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தற்போதைய இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சமடைந்துள்ளனர். எனவே, ஊருக்குள் புகுந்து நாய்களை தூக்கிச்செல்லும் சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோல் கோவை திருவள்ளுவர் நகர் பகுதியில் சிறுத்தை ஒனறு கோழியை வேட்டையாடி சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், ஆகிய வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது.

இந்நிலையில் சில மாதங்களாகவே சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை நடமாட்டமும் அவ்வப்போது தென்படுகிறது. மலை மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகள் என்பதால் வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதில் கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகரில் இன்று காலை சுமார் 6:15 மணியளவில் ஊருக்குள் வந்த சிறுத்தை ஒன்று ஒருவரது வீட்டில் வளர்த்து வந்த கூண்டில் இருந்த கோழிகளை வேட்டையாடி உள்ளது.

அந்த கூண்டில் மூன்று நான்கு கோழிகள் இருந்த நிலையில் சில கோழிகள் தப்பி பறந்துள்ளது. சிறுத்தை அதில் இருந்த ஒரு கோழியை வேட்டையாடி சென்றதாக தெரிகிறது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி யில் பதிவான நிலையில் தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன்பு இதே ஊரில் மலைத்தொடரில் சிறுத்தை ஒன்று பாறையில் அமர்ந்திருந்ததும் தடாகம்- வீரபாண்டி பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடிய காட்சிகளும் வெளியாகி இருந்தது. இப்பகுதி Reserve Forest பகுதி என வனத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top